போலீசின் தடுப்பு வேலிகளைத் தகர்த்தெறிந்து விட்டு விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு டெல்லிக்குள் நுழைந்தது. குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பின்னர் நண்பகல் 12 மணிக்குத் தான் அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8 மணிக்கே திடீரென டிராக்டர் அணிவகுப்பு தொடங்கியது.மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 2 மாதமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசும், விவசாயிகள் சங்கத்தினரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் புதிய சட்டங்களை 18 மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால் அதையும் விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கவில்லை. இதன் பிறகு நடந்த 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
இதற்கு மேல் தங்களால் இறங்கி வர முடியாது என்றும், அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை குறித்து விவசாயிகள் சங்கத்தினர் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கனவே கூறியிருந்தனர். ஆனால் முதலில் டெல்லி போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை.குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் அணிவகுப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் டிராக்டர் அணிவகுப்புக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது. இன்று டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பின்னர் நண்பகல் 12 மணியளவில் டிராக்டர் அணிவகுப்பு தொடங்கும் என்றும், சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் என்றும் விவசாய சங்கத்தினர் கூறியிருந்தனர்.
ஆனால் இன்று காலை 8 மணியளவிலேயே விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு தொடங்கியது. சிங்கு- திக்ரி எல்லையில் போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளைத் தகர்த்து நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியில் நுழைந்தன. மேலும் போலீஸ் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த டிரக்குகளையும் விவசாயிகள் அப்புறப்படுத்தினர். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பே விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு டெல்லிக்குள் நுழைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.