திருமணமான ஒரு சில மாதங்களில் மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், 18 பெண்களை கொலை செய்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஐதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கவலா அனந்தையா. கடந்த டிசம்பர் 30ம் தேதி இவரது மனைவி வெங்கடம்மா திடீரென மாயமானார். இது குறித்து அனந்தையா ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் அருகிலுள்ள அங்குஷாப்பூர் பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே ஒரு பெண்ணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கட்கேசர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் முகம் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அவர் யாரென முதலில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. அந்தப் பெண்ணின் உடல் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அதைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் தான் கொல்லப்பட்டது காணாமல் போன வெங்கடம்மா எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்தனர். அப்போது ஒருவருடன் வெங்கடம்மா ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ஆட்டோ அங்குள்ள ஒரு கள்ளுக்கடையின் முன் நின்றது. இதன் பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தான் வெங்கடம்மாவை கொன்றது சங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராமுலு (45) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தான் அவர் ஒரு தொடர் கொலையாளி என்றும், மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் பழிவாங்குவதற்காக 24 வருடங்களில் 18 பெண்களைக் கொன்றவர் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இது குறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் கூறியது: சங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராமுலுவுக்கு 21 வயது இருந்தபோது அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் ஒரு சில மாதங்கள் தான் அவர்களின் திருமணப் பந்தம் நீடித்தது. அவரது மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்தார். இதனால் ராமுலுவுக்கு பெண்கள் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து பெண்களைக் கொலை செய்ய அவர் தீர்மானித்தார். இதன்படி கடந்த 2003 முதல் 2019 வரை 16 பெண்களை ராமுலு இவ்வாறு கொலை செய்தார். இதன் பின்னர் கடந்த வருடம் மேலும் 2 பெண்களை ராமுலு கொன்றார். ஒரு கொலை தொடர்பாக 2011ம் ஆண்டு ராமுலு கைது செய்யப்பட்டார். ஆனால் அப்போது அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மனநல மருத்துவமனையில் இருந்து 5 பேருடன் தப்பி ஓடினார். இதன் பின்னர் 2013ல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து 2018ல் ஜாமீனில் விடுதலையானார். இதன் பிறகு மேலும் 2 பெண்களை ராமுலு கொலை செய்தார் இவ்வாறு அஞ்சனி குமார் கூறினார்.