தங்கள் கோரி்க்கையை மத்திய அரசு பரிசீலிக்காத காரணத்தினால், டிக்டாக், ஹெலோ செயலிகளை நடத்திவரும் சீன நிறுவனமாக பைட்டான்ஸ் இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, கடந்த ஜூன் மாதம் டிக்டாக், ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ள உத்தரவிட்டது. இதனால், டிக்டாக், ஹலோ செயலி வாடிக்கையாளர்கள் பெரும் வேதனையடைந்தனர். ஆனால், பெற்றோர்கள் சந்தோஷம் அடைந்தனர்.
தொடர்ந்து, மேலும், 50-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட விருப்பம் இருப்பதாகவும், அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும், உட்பட்டு செயல்படுவதாகவும், மத்திய அரசிடம் டிக்டாக் செயலி நடத்தும் பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஆனால்,மத்திய அரசு 7 மாதங்கள் ஆகியும் எந்தவிதமான சாதகமான நடவடிக்கையும் இல்லை என்பதால், வேறுவழியின்றி தங்கள் வர்த்தகத்தை இந்தியாவில் முடித்துக்கொள்ள பைட்டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக டிக்டாக் செயலின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் இயக்க விருப்பமாக இருந்தோம். கடந்த 2020, ஜூன் 29-ம் தேதி பிறப்பித்த விதிமுறைகளுக்கு உட்பட்ட தொடர்ந்து நடக்கிறோம் எனத் தெரிவித்திருந்தோம். ஆனால், மத்திய அரசிடம் இருந்து 7 மாதங்களாகியும் எந்தவிதமான தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை.
எனவே, டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து தெளிவு இல்லை. எங்களுக்கு தற்போது வேறு வழியில்லை, எனவே, தான் ஊழியர்களை குறைக்கிறோம். இந்தியாவில் மீண்டும் பைட்டான்ஸ் நிறுவனம் வருவதில் நிலையற்ற, நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. மீண்டும் வருவோமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நேரம் வரும் என நம்புவதாக தெரிவித்தார்.