விவசாயிகள் பேரணியில் புகுந்து டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் கொடியை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவானார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதைத் தொடர்ந்து, ஜன.26ம் தேதியன்று டெல்லியில் டிராக்டர்கள் பேரணியை மிகப்பெரிய அளவில் நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர்.
அதற்குக் கடைசி நேரத்தில் அனுமதி அளித்த டெல்லி போலீசார், குடியரசு தினப் பேரணி முடிந்த பின்பு டிராக்டர் பேரணியை நடத்த உத்தரவிட்டிருந்தனர்.ஆனால், சில இடங்களில் முன்கூட்டியே பேரணியைத் தொடங்கியதாலும், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் டிராக்டர்கள் சென்றதாலும் பிரச்சனை ஏற்பட்டது. டெல்லி போலீசார் பேரணியை தடுத்த போது, விவசாயிகள் டிராக்டர்களால் சாலைத் தடுப்புகளை மோதி உடைத்துக் கொண்டு சென்றனர். மேலும், செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் ஏறி கடும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இதில் பஞ்சாப் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தீப் சித்து மற்றும் சிலர் செங்கோட்டையின் ஒரு கோபுரத்தில் ஏறி பஞ்சாப்பின் நிஷான் சாகிப் கொடியை ஏற்றினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக ஆதரவாளரான தீப் சித்துவும், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் சிலரும் சேர்ந்துதான் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, விவசாயிகளின் நற்பெயரைக் கெடுக்கச் சதி செய்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு, பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது,வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 22 வழக்குகள் பதிவுசெய்து, 200 பேரைக் கைது செய்துள்ளனர். சில விவசாய தலைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் தீப் சித்து மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தீப் சித்து தலைமறைவாகி விட்டார்.