நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 16 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜன.26ம் தேதியன்று டெல்லியில் விவசாயிகள் மிகப் பெரிய அளவில் டிராக்டர்கள் பேரணியை நடத்தினர்.
இதில் கலவரம் வெடித்தது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களே வன்முறையை நடத்தியதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப் போவதாக 16 கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ், திரிணாமுல், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, பி,டி.பி, சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐ.யு,எம்.எல், ஆர்.எஸ்.பி, மதிமுக, கேரள காங்கிரஸ்(எம்), ஏ.ஐ.யு.டி.எப் ஆகிய கட்சிகள் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இது குறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற மரபுகளை மீறி அவசர கோலத்தில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி வன்முறை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் வன்முறை ஏற்படுவதற்கு மத்திய அரசின் பின்னணி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.