இந்தியாவில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டு இன்று ஒரு வருடம்.. கேரளாவில் முதல் நோயாளி

by Nishanth, Jan 30, 2021, 11:26 AM IST

இந்தியாவில் கொரானா நோய் கண்டுபிடிக்கப்பட்டு இன்று ஒரு வருடம் நிறைவடைகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் தான் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இவர் உலகில் முதலில் நோய் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் உள்ள வுஹானில் எம்பிபிஎஸ் படித்து வந்தவர் ஆவார்.

உலகிலேயே சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா நோய் பரவியது. இங்குள்ள வுஹான் நகரம் தான் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடந்த 2019 டிசம்பர் இறுதியில் இங்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு அங்கிருந்து மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

வுஹானில் நோய் பரவத் தொடங்கியதும் இந்தியர்கள் உள்பட வுஹானில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். இங்கு எம்பிபிஎஸ் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 3 பேர் ஊர் திரும்பினர். ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த ஒருவருக்குத் தான் கடந்த வருடம் ஜனவரி 30ம் தேதி முதலில் நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்தான் இந்தியாவின் முதல் ஒரு கொரோனா நோயாளி ஆவார்.

இதன் பின்னர் ஒருசில நாட்களில் இந்த மாணவருடன் ஊர் திரும்பிய மேலும் இரண்டு பேருக்கு நோய் பரவியது. இதன் பிறகு இந்த நோய் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்தது.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் இந்நோயால் கடும் பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் பாதித்து மரணமடைந்தனர்.

அமெரிக்காவில் 2.63 கோடி பேருக்கும், இந்தியாவில் 1.07 கோடி பேருக்கும், பிரேசிலில் 90.6 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 38.13 லட்சம் பேருக்கும், இங்கிலாந்தில் 37.43 லட்சம் பேருக்கும் நோய் பரவியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 4.43 லட்சம் பேரும், பிரேசிலில் 2.21 லட்சம் பேரும், மெக்சிகோவில் 1.55 லட்சம் பேரும், இந்தியாவில் 1.54 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 1.03 லட்சம் பேரும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 1.6 கோடி பேரும், இந்தியாவில் 1.03 கோடி பேரும், பிரேசிலில் 79.23 லட்சம் பேரும், ரஷ்யாவில் 32.29 லட்சம் பேரும், துருக்கியில் 23.40 லட்சம் பேரும் இதுவரை குணமடைந்துள்ளனர். இந்தியாவில் நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இன்று ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், தற்போது நாட்டில் நோய் பரவல் குறைந்து வருகிறது. மரண எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆனால் முதலில் நோய் கண்டுபிடிக்கப்பட்ட கேரளாவில் மட்டுமே நோய் பரவல் தற்போது அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியாவில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டு இன்று ஒரு வருடம்.. கேரளாவில் முதல் நோயாளி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை