டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பஞ்சாப் கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் கண்டிப்பாக செல்ல வேண்டுமென கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 65 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு பிடிவாதமாகவுள்ளது. விவசாயிகளும் போராட்டத்தை கைவிடபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளனது. இதற்கிடையே, கடந்த ஜனவரி 26-ம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியனர். பேரணி வன்முறையானதால் தடியடி நடத்தப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் கண்டிப்பாக டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல வேண்டுமென கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் விர்க் குர்த் என்ற கிராமத்தில்தான் தற்போது இந்த ஆணையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் ஒருவார காலம் டெல்லி போராட்டத்திற்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அந்த குடும்பம் தள்ளிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது, இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.