கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஈரான் நாட்டை சேர்ந்த சிலரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கு 'ஜெய்ஷ் உல் ஹிந்த்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு இதுவரை கேள்விப்படாதது என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர். டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில கார்களின் கண்ணாடிகள் நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. பாதுகாப்பு மிகுந்த இந்த இடத்தில் குண்டு வெடித்தது டெல்லி போலீசுக்கும், மத்திய உள்துறைக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததால் இந்த சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் ஏதாவது அமைப்பு தான் காரணமாக இருக்கும் என உள்துறை கருதுகிறது. இது தொடர்பாக ஈரான் நாட்டை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் டெலிகிராம் இணைய பக்கத்தில் இது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தாக்குதல்களின் தொடக்கம் மட்டும் தான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை உள்துறை இதுவரை உறுதி செய்யவில்லை. இந்த அமைப்பு குறித்து இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது என்று டெல்லி போலீசின் சைபர் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு சிறிய கவரை போலீசார் கைப்பற்றினர். அதில் என்னென்ன கிடைத்தது என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பரிசோதித்து வருகின்றனர். கார் அல்லது பைக் போன்ற ஓடும் வாகனங்களில் இருந்து கொண்டு வெடிகுண்டை வீசியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதற்கிடையே சம்பவ இடத்தில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாத் அமைப்பின் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி இஸ்ரேலிய தூதரக வாகனத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சம்பத்திலும் ஈரான் நாட்டின் பங்கு இருந்ததாக அப்போது சந்தேகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.