மேற்கு வங்கத்தில் சமீபத்தில் பதவி விலகிய அமைச்சர் ராஜிப் பானர்ஜி உள்பட 5 திரிணாமுல் கட்சி தலைவர்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்தனர். மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே பலமிழந்து குட்டிக் கட்சிகளாக மாறி விட்டன.
பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்றாக திரிணாமுல் கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களை பாஜக வளைத்து வருகிறது. திரிணாமுல் கட்சியில் இருந்து முக்கிய தலைவர் சுவெந்து அதிகாரி உள்பட 2 அமைச்சர்களும், பல எம்.எல்.ஏ.க்களும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடைசியாக, மம்தா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜிப் பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி விலகினார். அவரும் பாஜகவில் சேரப் போவதாகவும், கொல்கத்தா வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர் சேரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அமித்ஷாவின் மேற்கு வங்க விசிட் திடீரென ரத்தாகி விட்டது. இதையடுத்து, ராஜிப் பானர்ஜி, திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் பைஷாலி டால்மியா, பிரபீர் கோஷல், ஹவுரா முன்னாள் மேயர் ரத்தீன் சக்கரவர்த்தி, வங்காள நடிகர் ருத்ரானி கோஷ் ஆகியோர் நேற்று(ஜன.30) மாலை டெல்லிக்கு வந்தனர். அவர்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மேற்கு வங்க பாஜக தலைவர் விஜய்வர்கியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். திரிணாமுல் கட்சியில் இருந்து தொடர்ந்து பல முக்கியப் பிரமுகர்களும் வெளியேறி, பாஜகவில் இணைவதால், திரிணாமுல் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் இரு கட்சிகளும் இடையே கடும் மோதல்களும் நடைபெற்று வருகின்றன.