பிப்ரவரி 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை இப்போதைக்கு கேரளாவில் அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நோய் பரவல் கடுமையாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,635 பேருக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 8 மாதங்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் லாக் டவுன் நிபந்தனைகளில் மேலும் தளர்வுகளை ஏற்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் நிபந்தனைகளுடன் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தியேட்டர்களை திறக்கக் கூடாது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தியேட்டருக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும். உணவு ஸ்டால்களை திறக்கலாம் என்றாலும், டிஜிட்டல் முறையில் மட்டுமே பண பரிமாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும் தியேட்டரை கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் 100 சதவீதம் பேரை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன்படி ஒரு சில மாநிலங்களில் தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கேரளாவில் தற்போதைக்கு தியேட்டர்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக நோய் பரவல் கடுமையாக இருப்பது தான் இதற்கு காரணமாகும். தற்போதைய சூழ்நிலையில் தியேட்டரில் முழு கொள்ளளவு ஆட்களை அனுமதிப்பது நோய் பரவலை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.