செங்கோட்டை கலவரத்தை தூண்டிய நடிகரை பிடிக்க ஒரு லட்சம் பரிசு.. டெல்லி போலீஸ் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Feb 3, 2021, 13:01 PM IST

டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியேற்றிய நடிகர் தீப்சித்துவை பிடிப்பதற்கு டெல்லி போலீசார் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளனர். மேலும் பல போராட்டக்காரர்களை பற்றி தகவல் தருவோருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஜன.26ம் தேதியன்று டெல்லியில் டிராக்டர்கள் பேரணியை மிகப்பெரிய அளவில் நடத்தினர். குடியரசு தினப் பேரணி முடிந்த பின்பு டிராக்டர் பேரணியை நடத்த டெல்லி போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், சில இடங்களில் முன்கூட்டியே பேரணியைத் தொடங்கியதாலும், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் டிராக்டர்கள் சென்றதாலும் பிரச்னை ஏற்பட்டது. டெல்லி போலீசார் பேரணியை தடுத்த போது, விவசாயிகள் டிராக்டர்களால் சாலைத் தடுப்புகளை மோதி உடைத்து கொண்டு சென்றனர். மேலும், செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் ஏறி கடும் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் பஞ்சாப் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தீப் சித்து மற்றும் சிலர் செங்கோட்டையின் ஒரு கோபுரத்தில் ஏறி சீக்கியர்களின் நிஷான் சாகிப் கொடியை ஏற்றினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக ஆதரவாளரான தீப் சித்துவும், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் சிலரும் சேர்ந்துதான் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, விவசாயிகளின் நற்பெயரை கெடுக்க சதி செய்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

தற்போது, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 44 வழக்குகள் பதிவுசெய்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாகி விட்ட நடிகர் தீப் சித்துவைப் பற்றி தகவல் தருவோருக்கும், ஜக்ராஜ்சிங் உள்பட அவரது மேலும் 3 கூட்டாளிகளை பற்றி தகவல் தருவோருக்கும் தலா ஒரு லட்சம் வெகுமதி தரப்படும் என்று டெல்லி போலீஸ் அறிவித்திருக்கிறது. அத்துடன் கலவரத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் விவசாயச் சங்கத்தினர் ஜஸ்பீர்சிங், பூடாசிங், சுக்தேவ்சிங், இக்பால்சிங் உள்ளிட்டோரைப் பற்றி தகவல் தருவோருக்கும் தலா ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் இணைக் கமிஷனர் பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் டெல்லி விவசாயிகள் பேரணி கலவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

You'r reading செங்கோட்டை கலவரத்தை தூண்டிய நடிகரை பிடிக்க ஒரு லட்சம் பரிசு.. டெல்லி போலீஸ் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை