விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிகானா, நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் ட்விட் செய்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. பலரும் அத்துமீறி டெல்லி செங்கோட்டையில் ஏறி வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். தற்போது, போராடும் விவசாயிகளை தடுப்பதற்காக டெல்லி எல்லைகளில் போலீசார் பல்வேறு வகையான தடுப்புகளை போட்டுள்ளனர். கான்கிரீட் சுவர், இரும்பு வளையங்கள் என்று தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், டெல்லி எல்லைகளில் இணையதளவசதிகள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிகானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், ஹாலிவுட் நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட் போட்டுள்ளனர். ரிகானா தனது பதிவில், விவசாயிகளின் போராட்டச் செய்தியை இணைத்து, நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? என்று கேட்டிருந்தார். இதே போல் மற்றவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக போட்டிருந்தனர். இதையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு விவசாயிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
தனிப்பட்ட உள்நோக்கத்துடன் சிலர் அந்த போராட்டங்களை தூண்டி விடுகின்றனர். போராட்டக்காரர்கள் நடத்திய கலவரங்களில் பல போலீசாரும் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் போராட்டக்காரர்கள் உள்நோக்கத்துடன் சர்வதேச ஆதரவை திரட்ட முயற்சிக்கிறார்கள். அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள். எனவே, இந்தியாவில் நடக்கும் விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது சரியானதல்ல. இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைகளில் வெளிநாட்டினர் யார் தலையிடுவதையும் இந்திய மக்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.