காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடந்த 2019-2020ம் ஆண்டில் கட்சி நிதிக்கு பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்திருக்கிறது. அதன்படி, கடந்தாண்டில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக உள்ள சோனியா காந்தி, கட்சி நிதிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்திருக்கிறார்.
ராகுல்காந்தி ரூ.54 ஆயிரம் கொடுத்திருக்கிறார். ராகுலைப் போலவே குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசிதரூர், மன்மோகன்சிங், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோணி, தற்போது பாஜகவில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா, மறைந்த அகமதுபடேல் உள்பட பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் அளித்திருக்கிறார்கள். மேலும் பலரும் இதே போல் ரூ.54 ஆயிரத்தின் மடங்குகளில் நிதி அளித்திருக்கிறார்கள்.
அதென்ன ரூ.54 ஆயிரம் என்பதற்கான காரணம் தெரியவில்லை.. கட்சிக்கு நிதி அதிக நிதி அளித்தவர் கபில்சிபல்தான். இவர் கடந்தாண்டில் ரூ.3 கோடி கொடுத்திருக்கிறார். நிறுவனங்களில் ஏர்டெல் ரூ.13 கோடியும், ஐ.டி.சி. ரூ.4 கோடியும் அளித்துள்ளன. கடந்த 2019-2020ம் ஆண்டில் காங்கிரசுக்கு மொத்தம் ரூ.139 கோடி நிதி கிடைத்திருக்கிறது. முந்தைய ஆண்டில் இது ரூ.146 கோடியாக இருந்தது.