சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இது தொடா்பாக டிஜிபியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு விடுதிக்கு சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியை பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறினர். மேலும், அவர் திரும்பி வரும் போது அதிமுக கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
சசிகலா தரப்பினரின் அதிகாரப்பூர்வ நாளேடானா நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் இன்று(பிப்.6) ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், சசிகலா கொடி கட்டியதற்கே கலங்குகிறீர்களே, அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களில் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டிருந்தது.இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில்,பிப்.8ம் தேதி சென்னை திரும்பும் சசிகலாவுக்கு போரூர் முதல் மெரினா கடற்கரை வரை 12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவும் அனுமத தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் டிஜிபி திரிபாதியைச் சந்தித்து பேசினர். தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:பெங்களூருவில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றுள்ள டி.டி.வி. தினகரன் வன்முறையைத் தூண்டும் வகையில் பேட்டியளித்துள்ளார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறி விட்டது. இதற்கு பின்னர், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
எனவே, சசிகலா தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று மனு கொடுத்துள்ளோம். மேலும், பெங்களூருவில் சசிகலா ஆதரவாளர்கள் நூறு பேர் மனிதவெடிகுண்டாக மாறுவோம் என்று பேட்டியளித்திருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனும், சசிகலாவும் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். கலவரம் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு சி.வி.சண்முகம் கூறியிருக்கிறார்.