துறைமுக முனையத்தை மேம்படுத்த இந்தியாவிடம் வாங்கிய 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இலங்கை திடீரென திருப்பி செலுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் சீனா உதவி இருக்கக்கூடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இந்தியா மற்றும் ஜப்பானுடன் கடந்த 2019-ம் ஆண்டு முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இந்த நிலையில் திடீரென இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு சமீபத்தில் தன்னிச்சையாக ரத்து செய்ததுடன் ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தியிருக்கிறது. தொழிற்பூங்காக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்தப்பணிகள் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் இனி கொண்டு வரப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பேசியபடி ஒப்பந்தங்கள், உறுதிமொழிகளை இலங்கை அரசு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து வாங்கிய ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை அரசு திடீரென திருப்பி செலுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த சார்க் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தப்படி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து இலங்கை மத்திய வங்கி மூவாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்த கடனை மூன்று மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனே இந்த கடனுதவி வழங்கப்பட்டது. ஆனால் நிபந்தனையின்படி இலங்கை அரசு 3 மாதத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை. மாறாக இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இரண்டு முறை இந்த கடனுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே திடீரென ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி செலுத்தி விட்டதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இலங்கை அரசு டுவிட்டரில் , இந்தியாவிடம் இருந்து வாங்கிய கடன் தொகை அந்த நாட்டு ரிசர்வ் வங்கியிடம் உரிய காலத்தில் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது. இந்த கடன் தொகையை முன் கூட்டியே திருப்பி செலுத்துமாறு இந்தியாவிடம் இருந்து எந்த வேண்டுகோளும் வரவில்லை. அதே சமயம் இந்த இரு நாடுகளின் கூட்டு முயற்சிகள் வரும் காலங்களிலும் தொடரும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சி எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ் டிசில்வா , இந்தியாவிடம் வாங்கிய கடனை கடன் திருப்பி செலுத்தும் அளவிற்கு தற்போது இலங்கை அரசிடம் போதிய பணம் கையிருப்பு இல்லை. இதற்காக சர்வதேச நிதியம் பணம் கொடுத்திருந்தால் தான் இது சாத்தியமாகும் என்று சொல்லி இருக்கிறார். இவரது இந்த பேச்சு இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக சீனா இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கடன் தொகையை திருப்பி செலுத்த கோரி இந்தியா அழுத்தம் கொடுத்ததாக வந்த தகவலைடும் இலங்கை அரசு மறுத்துள்ளது.