சமூக வலைதளங்களில் அவதூறு பெண் டப்பிங் கலைஞரின் புகாரில் சினிமா டைரக்டர் கைது

by Nishanth, Feb 8, 2021, 11:33 AM IST

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர்.
மலையாள சினிமாவில் பிரசித்தி பெற்ற டப்பிங் கலைஞராக இருப்பவர் பாக்கியலட்சுமி. 1978ல் ரேணு சந்திரா என்ற நடிகைக்காக திரநோட்டம் என்ற படத்தில் இவர் முதன்முதலாக டப்பிங் பேசினார். இதன் பின்னர் இதுவரை இவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஷோபனா, ரேவதி, நதியா, ஊர்வசி, கனகா, வாணி விஸ்வநாத், மீனா உள்பட ஏராளமான நடிகைகளுக்கு மலையாள சினிமாவில் டப்பிங் பேசியுள்ளார்.

நடிகை ஷோபனாவுக்கு தான் இவரை அதிகபட்சமாக 33 படங்களில் டப்பிங் கொடுத்துள்ளார். ஊர்வசிக்கு 23 படங்களிலும், வாணி விஸ்வநாத்துக்கு 12 படங்களிலும், சம்யுக்தா வர்மாவுக்கு 11 படங்களிலும், கனகாவுக்கு 10 படங்களிலும் இவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷ் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிடுவதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் டைரக்டர் சாந்திவிளை தினேஷுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அவரை போலீசார் நேரில் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு எதிராக மீண்டும் அவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாக்கியலட்சுமி மீண்டும் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் டைரக்டர் சாந்திவிளை தினேஷை கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூபில் பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரைப் பாக்கியலட்சுமி தலைமையில் மூன்று பெண்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

You'r reading சமூக வலைதளங்களில் அவதூறு பெண் டப்பிங் கலைஞரின் புகாரில் சினிமா டைரக்டர் கைது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை