கோடை விடுமுறைக்கு அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் தங்கள் விசா விண்ணப்பங்களை விரைந்து அனுப்பவேண்டும் என்று இந்திய அமெரிக்கத் தூதரகம் அழைப்புவிடுத்துள்ளது.
சர்வதேச அளவில் விடுமுறைக்கு அமெரிக்கா பயணமாகும் சுற்றுலாவாசிகளில் இந்தியர்கள்தான் முதலிடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்தியாவில் இது கோடை விடுமுறைக் காலம் என்பதால் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.
இந்நிலையில், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் விரைந்து வந்து தங்கள் விண்ணப்பங்களை விரைந்து வழங்குமாறு இந்திய அமெரிக்கத் தூதரகம் அறிவிப்புவிடுத்துள்ளது. விடுமுறைக் காலம் என்பதால் அதிகளவில் மக்கள் விசா விண்ணப்பங்களைக் குவித்து வருவதால் விசா நேர்காணலுக்கு ஒருவரை அழைக்க ஒரு மாத காலம் எடுக்கிறதாம்.
இதனால் இறுதிநேர நெரிசலைத் தவிர்க்க இப்புதிய வேண்டுகோள் அறிவிப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டெல்லியில் மே மாத இறுதி வரையில் விசா நேர்காணல் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.