ரிஷப் பந்தின் மனிதாபிமானம் உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவி

by Nishanth, Feb 8, 2021, 18:12 PM IST

உத்தராகண்டில் பனிமலை இடிந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களுக்கு சென்னை டெஸ்டில் கிடைக்கும் தன்னுடைய ஊதியத்தை முழுவதும் வழங்குவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அறிவித்துள்ளார்.கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை ரிஷப் பந்த் என்ற பெயரைக் கேட்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்காது. விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் சொதப்பி வந்த அவருக்கு அணியில் விளையாட தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது தான் அதற்கு காரணமாகும்.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் சென்னை டெஸ்ட் போட்டியிலும் அவர் ஹீரோவாக மாறி விட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரித்திர வெற்றி பெறுவதற்கு ரிஷப் பந்தின் மிகவும் சாகசமான ஆட்டம் தான் முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் சென்னை டெஸ்ட் போட்டியிலும் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிரடியாக ஆடி இவர் 91 ரன்களை குவித்திருக்கா விட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபமாகி இருந்திருக்கும்.

இந்நிலையில் தான் விளையாட்டில் மட்டுமல்ல, மனிதாபிமானத்திலும் ஹீரோ தான் என்பதை ரிஷப் பந்த் நிரூபித்துள்ளார். நேற்று உத்தராகண்ட் மாநிலத்தில் பனிமலை இடிந்து அங்குள்ள தவுளிகங்கா ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி மாயமானார்கள். இதுவரை 20க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு சென்னை டெஸ்டில் கிடைக்கும் ஊதியம் முழுவதையும் வழங்குவதாக ரிஷப் பந்த் அறிவித்துள்ளார்.m'உத்தராகாண்ட் மாநிலத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி நான் மிகவும் வேதனைப்படுகிறேன். மீட்பு பணிகளுக்காக சென்னை டெஸ்டில் கிடைக்கும் என்னுடைய ஊதியம் முழுவதையும் நன்கொடையாக வழங்க விரும்புகிறேன். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமாக அமையும்' என்று ரிஷப் பந்த் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading ரிஷப் பந்தின் மனிதாபிமானம் உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை