உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலக முடிவு செய்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனம் 1994ம் ஆண்டு அமெரிக்காவில் சிறிய புத்தகக் கடையாகத்தான் ஆரம்பமானது. ஜெப் பெசோஸ் என்பவர்தான் அமேசானை துவக்கியவர்.தற்போது அமேசான் நிறுவனத்தில் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, பெசோஸ் தான் உலகின் முதல் பணக்காரராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 19,620 கோடி டாலர்கள்.
அமோசனை தொடங்கியது முதல் இவர்தான் அந்த நிறுவனத்தின் உயர் தலைமை பதவியில் இருந்து வருகிறார் .இந்த உயரிய பொறுப்பு அவருக்கு சலித்து விட்டதோ என்னவோ இந்த ஆண்டின் மத்தியில் அந்த பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜெப் பெசோஸ்.இவருக்கு அடுத்தபடியாக அந்த பொறுப்பிற்கு தற்போது அமேசான் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் தலைமை பொறுப்பை வகிக்கும் ஆன்டி ஜெஸ்ஸி வர உள்ளார்.
தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகும் பெசோஸ் அமேசானின் நிர்வாகத் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். இதனால், அவர் நடத்தி வரும் பிற தொழில்களில் கவனம் செலுத்த பெசோசுக்கு நேரம் கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ஒரு பேட்டியில் பெசோஸ், அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும். காலத்தையும் சக்தியையும் உறிஞ்சும். இது போன்ற பொறுப்புகளை ஏற்கும் போது, இதர விசயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். ஆனால், நிர்வாகத் தலைவர் பதவி வகித்தால், அமேசானைக் இன்னும் நன்றாக கவனிக்கலாம். அதே நேரத்தில் எனக்கு ஆர்வம் மிக்க மற்ற விஷயங்களுக்கும் நேரத்தையும் சக்தியையும் செலவிட முடியும் என தெரிவித்திருக்கிறார்.