24 நாட்களில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உலகிலேயே இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்த தடுப்பு மருந்துகளுக்கு இதுவரை குறிப்பிடத்தக்க அளவுக்குப் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
இதனால் இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தத் தடுப்பு மருந்துகளை வாங்கத் தயாராக இருக்கின்றன. நேபாளம், மியான்மர், பூடான், சவுதி அரேபியா, பிரேசில் உள்பட ஏராளமான நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பு மருந்துகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைப்பதற்காக இந்தியாவில் உள்ள சிரம் இன்ஸ்டியூட் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்குக் குறிப்பிடும்படி யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. கேரளாவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவருக்கு மட்டும் லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே இந்தியாவில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 நாட்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று வரை 60,35,660 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகளவில் இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இதே எண்ணிக்கையில் 26 நாட்களிலும், இங்கிலாந்தில் 46 நாட்களிலும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மட்டும் இந்தியாவில் 2,23,298 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரத் துறை ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.