மோப்ப சக்தி மூலம் கொரோனா தொற்றை கண்டறிய நாய்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கொரோனா கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில், இந்திய ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டுள்ள சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்கள், சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிந்து வருகிறது.
இதுவரை இந்திய ராணுவ நாய்கள் 3,800 மாதிரிகளை பரிசோதித்து 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாய்களில், இதில் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்க்கு கேஸ்பர் என்றும், சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த நாய்க்கு ஜெயா என்றும் இந்திய ராணுவம் பெயர் வைத்துள்ளது.
இந்த நாய்களுடன் விரைவில் மணி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சிப்பிப்பாறையும் கொரோனாவை கண்டறிய தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது, இந்த நாய்கள் சண்டிகர் ராணுவ முகாமில் இருக்கிறது. பின்பு இவை லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியில் பணியமர்த்தப்பட இருக்கிறது. இந்த நாய்கள் மூலம் பொது இடங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளில் ஆர்டி பிசிடிஆர் உதவி இல்லாமல் விரைவில் கொரோனா பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ராணுவ கால்நடைப் பிரிவு அதிகாரி கர்னல் சுரீந்தர் சைனி கூறுகையில், கொரோனா தொற்றை கண்டறிய தற்போது 8 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவைகளுடன் மேலும் 2 நாய்கள் என மொத்தம் 10 நாய்கள் கொரோனா பரிசோதனை பணிக்கு பயன்படுத்தப்படும். இந்த நாய்களுக்கு கொரோனா பரிசோதனை பயிற்சி அளிக்க 36 வாரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் இப்போது இருக்கும் சூழலுக்காக 16 வாரங்களில் நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என்றார். பிரிட்டன், பின்லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், அமீரகம், ஜெர்மனி, லெபனான் ஆகிய நாடுகளில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் கொரோனா கண்டறியும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.