வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவை மீறினால் இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவன அதிகாரிகளை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு டுவிட்டர் மூலம் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
காலிஸ்தான் இயக்கம் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய 1178 டுவிட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதில் இதுவரை 553 டுவிட்டர் கணக்குகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது என்று டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்திருந்தது. #ModiplanningFarmerGenocide என்ற ஹாஷ்டேகுடன் கூடிய 257 டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டிருந்தது.
ஆனால் இதில் 126 கணக்குகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யக் கோரிய மத்திய அரசின் பட்டியலில் கேரவன் மேகசின், சிபிஎம் தலைவர் முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, கிசான் ஏகதா மோர்ச்சா மற்றும் பிகேயு ஏகதா உக்ரன் ஆகியவையும் இருந்தது.அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் நீக்காததால் மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையை தூண்டும் டுவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மீண்டும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 69 ஏ பிரிவின் படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் சொந்த சட்டங்கள் எப்படி இருந்தாலும், இந்திய அரசின் சட்டத்தைக் கண்டிப்பாக மதிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவன அதிகாரிகளை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். அப்போது வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் டுவிட்டர் கணக்குகளை கண்டிப்பாக நீக்கியே தீர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள கேபிட்டல் மாளிகையில் நடந்த சம்பவத்தையும், டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறையையும் இரண்டு விதமாக பார்ப்பது நல்லதல்ல என்றும் அவர் கூறினார்.