மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.கேரளாவில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கடந்த நான்கு மாதங்களாகச் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.மண்டலக் காலம் முடியும் வரை ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது.
ஆனால் சபரிமலையில் நோய் பரவல் மேலும் அதிகரித்ததால் மகரவிளக்கு காலம் முதல் ஆர்டிபிசிஆர், ஆர்டி லேம்ப், ட்ரூ நாட் ஆகிய பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டது. இந்த பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சபரிமலையில் இதுவரை ஆன்டிஜன் பரிசோதனைக்கு மட்டுமே வசதி இருந்தது. இதனால் பக்தர்கள் சபரிமலை செல்லும் வழியில் இந்த வசதி உள்ள இடத்திலிருந்து பரிசோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதனால் சபரிமலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாசி மாத பூஜைகள் நடை திறக்கப்படும் நாள் முதல் சபரிமலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது. மாசி மாத பூஜைகளுக்காக நாளை (12ம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது. 13ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த 5 நாட்களிலும் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் ஆர்டிபிசிஆர் மற்றும் ஆர்டி லேம்ப் பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதற்குக் கட்டணம் ₹ 1150 ஆகும்.