சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் கிழக்கு லடாக்கில் எல்லையில் சீன ராணுவம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் படைகளைக் குவித்து பதற்றத்தை உருவாக்கியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். கோங்காலா, கோக்ரா, பாங்காங் ஏரியின் வடக்கு கரை ஆகிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர்.
கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி கல்வானில் நடந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.கிழக்கு லடாக்கின் எல்லையில் ஏற்கனவே இந்தியாவிடம் இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளை மாற்றியமைக்கச் சீனா தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதைத் தொடர்ந்து சீனாவுடன் தூதரக மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்நிலையில், லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒரு அறிக்கை அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து எல்லைக்கோட்டுப்பாட்டுப் பகுதியை மாற்றியமைக்க முயன்றது. எல்லையில் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய வீரர்கள் எதிர் முகாமிட்டு, ஊடுருவல்களைத் தடுத்துள்ளனர். இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தைக் கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சீனாவுடன் 9 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது, பாங்காங் ஏரி அருகே சீனப்படைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விலக்கிக் கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டது. இருதரப்பிலும் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலையைத் தொடர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.