அதிமுக கூட்டணியில் சசிகலா வருகையை பாஜக விரும்புகிறதா?

by எஸ். எம். கணபதி, Feb 11, 2021, 13:46 PM IST

அதிமுகவுக்குள் சசிகலா வருகையை பாஜகவினர் விரும்புகிறார்களா, அவரை ஒதுக்க விரும்புகிறார்களா என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.பெங்களூருவில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சென்னை திரும்பினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியைப் பயன்படுத்துவது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் முன்கூட்டியே டிஜிபியிடம் கொடுத்திருந்தனர். இதையடுத்து, அவரது காரில் கொடியை அகற்ற போலீசார் நோட்டீஸ் அளித்தனர்.

இதே போல் பல தடைகளைத் தாண்டி 23 மணி நேரத்திற்கு நீண்ட மிகப்பெரிய வரவேற்புடன் சசிகலா வந்து சேர்ந்தார். தான் அதிமுகவை ஒருங்கிணைக்க விரும்புவதாகவும், அனைவரும் தன்னைத் தேடி வர வேண்டுமென்றும் கூறினார்.ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளிக்கையில், சசிகலா மற்றும் தினகரனுக்கு அதிமுகவில் இனி இடமில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். சசிகலா அடுத்து என்ன செய்வார்? அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவாரா? பொதுக்குழுவைக் கூட்டுவாரா? என்று பலவிதமான பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:சசிகலா இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. அவர் அதைத் தெரிவித்த பிறகுதான், கூட்டணியில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்துப் பேச முடியும். அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம். அதனால், அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டதில் புதிதாக ஏதும் இல்லை. அவருடைய தேர்தல் நிலைப்பாடு என்ன என்பதை அவர் சொன்ன பிறகு அதுகுறித்து நான் கருத்துச் சொல்கிறேன்.இவ்வாறு எல்.முருகன் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்த போது, எம்ஜிஆருக்கு 1977ல் கூடிய கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி. அப்படியொரு கூட்டத்தைப் பார்க்கவில்லை. இப்போது சசிகலாவுக்கும் அப்படியொரு மக்கள் திரட்சி ஏற்பட்டிருக்கிறது. தொண்டர்களின் எழுச்சி தெரிகிறது என்று கூறியிருந்தார்.அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா அளித் பேட்டியில், சசிகலா வருகையால் பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரை அதிமுகவில் சேர்ப்பதற்கு அதிமுக முயற்சிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

You'r reading அதிமுக கூட்டணியில் சசிகலா வருகையை பாஜக விரும்புகிறதா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை