சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.டெல்லியில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதில் 583 கணக்குகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன.
பத்திரிகை நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்தால் அது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகி விடும் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக தாங்கள் தெரிவித்த அனைத்து கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவன அதிகாரிகளைக் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.டுவிட்டர் நிறுவனத்தின் சொந்த சட்டங்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவில் செயல்படும் போது இந்தியாவின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்யசபாவில் கூறியது: சமூக வலைத்தளங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். சாதாரண மக்களுக்கு அவை பெரும் உதவியாக இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக வலைத் தளங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனாலும் போலியான செய்திகளைப் பரப்புவதற்கும், கலவரத்தைத் தூண்டுவதற்கும் வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.