ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை

by Nishanth, Feb 12, 2021, 18:53 PM IST

ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில் கூறினார்.கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது பெரும் பணக்காரர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பட்ஜெட் என்றும், ஏழைகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை என்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ராஜ்யசபாவில் கூறியது: ஏழைகளுக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆனாலும் தொடர்ந்து மத்திய அரசை குற்றம் சாட்டுவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. 80 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியங்களும், 8 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு, விவசாயிகள், பெண்கள் உள்பட 40 கோடி பேருக்கு நேரடியாக மானியங்கள் பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 1.68 கோடி பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது பணக்காரர்களுக்காகவா கட்டப்பட்டது? கொரோனா என்ற கொள்ளை நோய்க்குப் பின்னர் உலகம் முழுவதும் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகவும், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் தான் மத்திய பட்ஜெட்டில் உள்ளன. குறுகிய கால திட்டங்களுடன் நீண்டகால நிரந்தர வளர்ச்சியும் தான் மத்திய அரசின் முக்கிய குறிக்கோளாகும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

You'r reading ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை