பணத் தட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதை அறிவதற்கான ஒரு ஆய்வுதான் பண தட்டுப்பாடு என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தில்லி, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் திடீரென ஏடிஎம்-களில் பணம் வராததால், கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளிவருவதாகவும், 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் முடக்குவதற்கு மோடி அரசு திட்டமிடுவதாக தகவல்கள் பரவுவதால் மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். பணத்திற்காக பெரும் அலைக்கழிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, “வழக்கத்திற்கு மாறாக சில பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளதால் இந்த பணத்தட்டுப்பாடு தற்காலிகமாக உருவாகியுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றும் கூறியிருந்தார்
இந்நிலையில் பணத்தட்டுப்பாடு குறித்துப் பேட்டி ஒன்றை அளித்த, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் ரஜினிஷ் குமார், “பணத்தட்டுப்பாடு இருப்பதாக பெரிய அளவில் பேசப்படுகிறது; ஆனால் அப்படி ஏதுமில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு நாட்டில் 17 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்க பணம் புழக்கத்தில் இருந்தது. இதுவே 2018 மார்ச் மாதம் 18 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எனவே, பணத்தட்டுப்பாடு என்று யாரும் பயப்பட வேண்டாம். தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் பொறுத்தவரை, பணத் தட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதை அறிவதற்கான ஒரு உளவியல் ஆய்வுதான்” என்று கூறி, அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், “மக்கள் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தாலும் அந்தப் பணம் வங்கிகளுக்குத்தான் திரும்பி வரப்போகின்றன; அப்படியிருக்க மக்கள், பணத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?” என்றும் அதிகார தொனியுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், செயற்கையான பண தட்டுப்பாட்டை ஏற்படுத்தி சோதனை செய்ய நாங்கள் என்ன எலிகளா? என்று வங்கி வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.