ஆந்திராவில் அதிகாலை நேரத்தில் ஆளும்கட்சி கவுன்சிலரை பல முறை காரால் மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. காக்கிநாடா மாநகராட்சியில் 9வது வார்டு கவுன்சிலர் கம்பாரா ரமேஷ், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர். இவர் தனது நண்பர் குராஜலா சின்னா, அவரது தம்பி மற்றும் சில நண்பர்களுடன் கங்காராஜு நகரில் ஒரு வீட்டில் பிப்.11ம் தேதி இரவு மது அருந்தினர். விடிய விடிய மது அருந்திய அவர்கள், 12ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு வெளியே புறப்பட்டனர்.
அப்போது, இன்னொரு நண்பரின் பர்த்டே பார்ட்டி நடைபெறும் இடத்திற்குச் செல்லலாம் என்று கவுன்சிலர் ரமேசிடம் சின்னா கூறியிருக்கிறார். அதற்கு அதிக நேரமாகி விட்டது என்று கூறி, ரமேஷ் வர மறுத்துள்ளார். இதையடுத்து, சின்னா தனது காரில் தம்பியுடன் புறப்பட்டார். கவுன்சிலர் ரமேஷ் தனது கார் சாவியை பாக்கெட்டில் தேடிய போது கிடைக்கவில்லை. அதை சின்னாவே எடுத்து வைத்திருக்கிறார் என்று கண்டுபிடித்து அவரது காரை மறித்தார். அப்போது சின்னா அவரிடம், விலகிப் போய் விடு, காரை ஏற்றி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். ஆனாலும் ரமேஷ் காரை மறித்துள்ளார். அருகில் இருந்த நண்பர்கள் ரமேசை இழுத்துள்ளனர்.
அதன் பின்பும் மீண்டும் கார் முன்பாக ரமேஷ் சென்று மறித்தார். உடனே சின்னா காரை இயக்கி ரமேஷ் மீது மோதினார். ரமேஷ் தடுமாறி எழுந்த போது மீண்டும் மோதினார். ரமேஷ் கீழே விழுந்த பின்பும் பல முறை காரால் ஏற்றி கொலை செய்த சின்னா, அங்கிருந்து காரில் தப்பி விட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரமேசுக்கும், சின்னாவுக்கும் வேறு ஏதோ பகை இருந்துள்ளதாகவும், அதன் காரணமாக திட்டமிட்டு ரமேசை சின்னா கொலை செய்திருக்கிறார் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.