ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் டெல்லி முதல் அமைச்சரின் மகள் ஏமாந்துள்ளார். அவருடைய வங்கி கணக்கிலிருந்து 34,000/- ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் பெயர் ஹர்ஷிதா கெஜ்ரிவால். மகன் பெயர் புல்கித் கெஜ்ரிவால். கடந்த 2014ஆம் ஆண்டு சிபிஎஸ்சி தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண்களை ஹர்ஷிதா பெற்று தேர்ச்சி பெற்றார். டெல்லி ஐஐடியில் இவர் கெமிக்கல் எஞ்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஹர்ஷிதா, பயன்படுத்திய சோபா ஒன்றை விற்பதற்காக ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அவரிடம் சோபாவை வாங்குவதாக ஒரு நபர் கூறியுள்ளார். அவர் பார்கோடு ஒன்றை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுமாறு ஹர்ஷிதாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதை ஸ்கேன் செய்தபோது சிறிய தொகை ஒன்றை அனுப்பி மோசடி நபர், பின்னர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் வங்கி கணக்கிலிருந்து முறையே ரூ.20,000/- மற்றும் ரூ.14,000/- ஆகிய தொகைகளை மோசடி செய்துள்ளார். மொத்தம் ரூ.34,000/- தொகையை முதல் அமைச்சரின் மகள் இழந்துள்ளார். இது குறித்து முதல் அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த டெல்லி போலீசார், சஜித், கபில் மற்றும் மன்வேந்திரா ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
பார்கோடு மோசடி
நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி நூதன முறைகளில் நடந்து வருகிறது. இதில் பார்கோடு மோசடி நவீன முறையாகும். இதன் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான இணைய பயனர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இணையத்தின் வழியே ஏதாவது பொருளை விற்க முயற்சிப்பவர்களை மோசடி கும்பல்கள் குறிவைக்கின்றன. வழக்கமாக இதுபோன்று விற்பனை செய்பவர்கள், நேரடியாக சந்திக்க வலியுறுத்துவர். நேரடி சந்திப்பை தவிர்ப்பதற்காக மோசடியாளர்கள் இராணுவத்தில் பணியாற்றுவது போல நடிக்கவும் செய்கின்றனர். இணையத்தின் வழியே விற்பனையை முடித்துக்கொள்ள ஒத்துக்கொள்பவர்களுக்கு பார்கோடு (bar code)ஒன்றை மோசடி கும்பல் அனுப்பும்.
இந்த பார்கோடை ஸ்கேன் செய்ததும், இணையம் மூலம் விற்பனை செய்ய முயற்சிப்பவரின் வங்கி கணக்குக்கு சிறு தொகை வந்து சேரும். சிறு தொகை தன் கணக்குக்கு வந்ததும், அவர் பொருளை வாங்க முயற்சிப்பவரை நம்புவார். பிறகு இரண்டாவது முறையாக ஒரு பார்கோடு அனுப்பப்படும். இது பணத்தை செலுத்துவதற்காக அல்லாமல் பணத்தை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாயிருக்கும். அந்த பார்கோடை ஸ்கேன் செய்ததும், மோசடிக்காரர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிவிடுகின்றனர். இதுபோன்று ஏமாந்த அனுபவம் பலருக்கும் இருக்கிறது.