உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கர வெடி பொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் உபியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.உத்திரப் பிரதேச மாநிலத்தில் சில தீவிரவாத அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே மாநில உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இதன் பேரில் போலீசார் லக்னோ உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இங்கு குதம்பா என்ற இடத்திற்கு அருகே உள்ள குக்ரே என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 தங்கியிருப்பதாகப் போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் பயங்கர வெடி பொருட்களுடன் 2 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த அவர்கள் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த அன்சார் பதருதீன் மற்றும் பிரோஸ் கான் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து உபி மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் கூறியது: தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து பயங்கர வெடி பொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. உபியில் பல இடங்களில் தாக்குதல் நடத்தவும், சில இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்லவும் இவர்கள் சதித்திட்டம் தீட்டி இருந்தனர். மேலும் உபியில் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்களைத் தீவிரவாத இயக்கத்திற்குத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்துத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் குறித்து ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிக்கினர். இவ்வாறு அவர் கூறினார்.