ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார்.
தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அதன் தலைநகர் ஐதராபாத் மாநகராட்சியில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாரா ஹில்ஸ் வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட விஜயலட்சுமி, டிஆர்எஸ் கட்சியின் சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்.12ம் தேதி அவர் பதவியேற்றதும், அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர்.
அப்போது, சமீபத்தில் ஐதராபாத்தில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பது பற்றி மேயர் விஜயலட்சுமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த போது, நான் பதவியில் இருக்கும் வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐதராபாத்தில் மழையே வரக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று கூறினார். சிலர் பேட்டியின் இந்த ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து, சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பினர். இதையடுத்து, விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஐதராபாத்தில் கடந்த காலத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லும் போது, இனி அப்படியொரு வெள்ளம் வரக் கூடாது என்ற அர்த்தத்தில்தான் நான் பேசினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.விஜயலட்சுமி கடந்த ஜனவரியில் தாசில்தார் சீனிவாஸ் என்பவரிடம் தகராறு செய்திருந்தார். தற்போது விஜயலட்சுமி மேயராக பதவியேற்றதும் அந்த தாசில்தார் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். இதுவும் ஐதராபாத் அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.