கிரண்பேடி நீக்கம்.. கடைசிநேர கபடநாடகம்.. ஸ்டாலின் காட்டம்..

by எஸ். எம். கணபதி, Feb 17, 2021, 12:07 PM IST

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. இது பற்றி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்படவிடாமல் தடுத்து, ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி, அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம். புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை - இறுதிக் கட்ட முயற்சி. துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பா.ஜ.க. செய்த தரம் தாழ்ந்த அரசியலையும் - அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ் படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading கிரண்பேடி நீக்கம்.. கடைசிநேர கபடநாடகம்.. ஸ்டாலின் காட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை