வங்கி லாக்கர்களுக்கு புதிய விதிகளை வகுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

by எஸ். எம். கணபதி, Feb 20, 2021, 09:59 AM IST

வங்கி லாக்கர்களை கையாள்வதற்கு புதிய விதிமுறைகளை 6 மாதத்திற்குள் வகுக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த லாக்கர்களுக்கு ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதிமுறை கையாளப்படுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அமிதாப் தாஸ்குப்தா என்பவர், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் லாக்கர் வைத்திருந்தார்.

அதற்குக் கட்டணங்களைச் செலுத்தத் தவறியதால், அந்த லாக்கரை வங்கியே உடைத்து நகைகளை எடுத்து தாஸ்குப்தாவிடம் அளித்துள்ளனர். தன்னை கேட்காமல் லாக்கரை உடைத்தது தவறு என்றும் லாக்கரில் தான் வைத்திருந்த 7 ஆபரணங்களில் 3ஐ மட்டும்தான் திருப்பி கொடுத்தார்கள் என்றும் கூறி, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.வழக்கில் அவருக்கு ரூ.3லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ரூ.30 ஆயிரமாக மாநில நுகர்வோர் நீதிமன்றம் குறைத்தது. அதையே தேசிய நுகர்வோர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. தாஸ்குப்தா அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தான கவுடா, வினீத்சரண் ஆகியோர் அளித்த தீர்ப்பு வருமாறு:வங்கிகளில் லாக்கர்களை கையாள்வதற்கு ஒரே மாதிரியான விதிமுறைகளே இல்லை. வாடிக்கையாளரின் லாக்கரில் என்ன இருந்தது என்று தெரியாது என வங்கிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. வாடிக்கையாளரின் லாக்கர் பூட்டை உடைத்துத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருக்கு முதலில் தகவல் தர வேண்டும். அவர் வராவிட்டால் உயர் அதிகாரிகள் மற்றும் பொது நபர் ஒருவரின் முன்னிலையில்தான் திறக்க வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அனைத்து வங்கிகளுக்குத்தாக புதிய லாக்கர் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி 6 மாதத்திற்குள் வகுக்க வேண்டும்.

லாக்கர்களில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவதற்கான விகிதம் குறித்தும் விதியை வகுக்க வேண்டும்.இந்த வழக்கில் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் லாக்கர் பூட்டை உடைத்ததால், வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதைத் தவறு செய்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்து, வாடிக்கையாளருக்கு நஷ்டஈடாகத் தர வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

You'r reading வங்கி லாக்கர்களுக்கு புதிய விதிகளை வகுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை