அதிர்ஷ்டம் என்றால் இப்படி அடிக்க வேண்டும் பரிசு விழவில்லை என கருதி கிழித்துப் போடவிருந்த லாட்டரிக்கு 80 லட்சம் முதல் பரிசு

by Nishanth, Feb 22, 2021, 14:48 PM IST

பரிசு கிடைக்கவில்லை எனக் கருதிக் கிழித்துப் போட இருந்த லாட்டரிக்கு முதல் பரிசு ₹ 80 லட்சம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள புல்லூர்க்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (58). இவருக்கு சீனத் என்ற மனைவியும், ஷஹீரா, ஷஹீர் மற்றும் ஷபீதா என்ற 3 குழந்தைகளும் உள்ளனர். சிராஜுதீன் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக வீடு எதுவும் கிடையாது.

இதனால் உறவினர் ஒருவரின் வீட்டில் தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிராஜுதீனுக்கு லாட்டரி எடுக்கும் பழக்கம் உண்டு. கடந்த 20 வருடங்களாக இவர் தினமும் லாட்டரி எடுத்து வருகிறார். இதில் சிறிய சிறிய பரிசுகள் இவருக்குக் கிடைத்தது உண்டு.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் கேரள அரசின் காருண்யா என்ற லாட்டரி சீட்டை எடுத்தார். மொத்தம் ஒரே எண்ணில் 10 லாட்டரி சீட்டுகளை இவர் எடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி இந்த லாட்டரி குலுக்கல் நடந்தது. மறுநாள் பேப்பரில் இவர் முடிவுகளைப் பார்த்தார். வழக்கமாக இவர் குறைந்த பரிசுத் தொகை ஏதாவது விழுந்துள்ளதா என்பதைத் தான் முதலில் பார்ப்பார்.

5 ஆயிரம் ரூபாய் வரை பார்த்த போது எந்த பரிசும் கிடைக்கவில்லை. இதனால் வேறு பரிசு ஏதும் விழுந்திருக்காது எனக் கருதி அந்த லாட்டரிச் சீட்டை கிழித்துப் போட முடிவு செய்திருந்தார். இந்த சமயத்தில் தான் அவருக்கு லாட்டரி விற்ற ஏஜென்ட், சிராஜுதீனுக்கு போன் செய்து அவருக்கு அந்த லாட்டரியில் முதல் பரிசு ₹ 80 லட்சம் விழுந்திருப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட சிராஜுதீன் இன்ப அதிர்ச்சி அடைந்தார். முதல் பரிசு கிடைத்த அதே எண்ணில் மேலும் 9 டிக்கெட்டுகள் எடுத்திருந்ததால் அந்த டிக்கெட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ₹ 10 ஆயிரம் கிடைத்தது. அந்த லாட்டரிச் சீட்டுகளைக் கிழித்துப் போட்டிருந்தால் சிராஜுதீனுக்கு 80 லட்சம் பறிபோயிருக்கும். அதிர்ஷ்டம் என்றால் இப்படித் தான் அடிக்க வேண்டும் என்று அப்பகுதியினர் பேசிக்கொள்கின்றனர்.

You'r reading அதிர்ஷ்டம் என்றால் இப்படி அடிக்க வேண்டும் பரிசு விழவில்லை என கருதி கிழித்துப் போடவிருந்த லாட்டரிக்கு 80 லட்சம் முதல் பரிசு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை