பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஏசி காரில் இருந்து இறங்கி பொது மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க வேண்டும் என்றார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களான பி.சி. சர்மா, ஜீது பட்வாரி மற்றும் குணால் சவுத்ரி ஆகியோர் இன்று சட்டசபைக்குச் சைக்கிளில் வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து 13 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று டெல்லியில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா சைக்கிளில் சென்று போராட்டம் நடத்தினார். டெல்லி கான் மார்க்கெட்டில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு அவர் கோட் சூட்டுடன் தலையில் ஒரு ஹெல்மெட்டும் அணிந்து சைக்கிளில் சென்றார்.
பின்னர் அவர் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டில் பொதுமக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். ஆனால் இதையெல்லாம் பிரதமர் மோடி கண்டு கொள்ள மறுக்கிறார். அவர் ஏசி காரில் இருந்து இறங்கி பொதுமக்கள் எந்த அளவுக்குக் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அப்போது தான் விலையைக் குறைப்பதற்கு அவருக்கு மனது வரும். எல்லா பிரச்சினைகளுக்கும் இதற்கு முன்பு இருந்த அரசுகள் தான் காரணம் என்று முந்தைய அரசுகளைக் குற்றம்சாட்டுவதைப் பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என்று கூறினார். ராகுல் காந்தியும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி மோடி, உங்களது பாக்கெட்டை காலி செய்து தன்னுடைய நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புகிறார் என்று அவர் கூறினார்.