ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”. எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலைச் சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. படம் பற்றி இயக்குனர் டி சுரேஷ் குமார் கூறியதாவது:எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், ஒரு கிறித்தவ இளைஞனுக்கும், ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே, இந்தப் படம்.
காதலில் ஒரு பிரச்சனை வரும் போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை.படத்தில் நாயகி அறிமுக காட்சியும், இறுதிக் காட்சியும் மழையில் நடக்கும் . அதனால் தான் படத்துக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்குமென வைத்தோம். தற்போது படம் உலக திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்,எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்.
பட தயாரிப்பாளர் பி. ராஜேஷ் குமார் கூறியதாவது:படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன விதமும், குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியும் என்னை மிகவும் கவர்ந்தது . அதனால் தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன் . இது குடும்பத்தோடு எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.இவ்வாறு அவர் கூறினார்.இப்படத்தில் அன்சன் பால், பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். இவர் ஏ ஆர் ரகுமான் பள்ளியில் பயின்றவர். ஒளிப்பதிவு கல்யாண், படத்தொகுப்பு வெங்கடேஷ். இயக்குநர் விஜி, கவின் பாண்டியன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.படத்தின் வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.