விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது

by Nishanth, Feb 25, 2021, 15:12 PM IST

விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் தாயை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் காஞ்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி வர்ஷா (28). இவர்களுக்கு அத்வைத் (5) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். சுபாஷ் எர்ணாகுளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுபாஷ் தன்னுடைய மனைவியிடம் 2 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து அதைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பணத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயை வர்ஷா செலவழித்து விட்டார். தனக்கு உடைகள் மற்றும் மேக்கப் சாதனங்கள் வாங்குவதற்காக அந்தப் பணத்தை அவர் செலவழித்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப் பணத்தை வர்ஷாவிடம் சுபாஷ் கேட்டுள்ளார். அப்போது அதில் 75 ஆயிரத்தைச் செலவு செய்து விட்டதாக அவர் கூறினார். இதில் கோபமடைந்த சுபாஷ், வர்ஷாவை கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வர்ஷா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து சம்பவத்தன்று ஐஸ்கிரீம் வாங்கி அதில் விஷம் கலந்து அவர் சாப்பிட்டுள்ளார். இதில் அவருக்குத் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால் படுக்கை அறையில் படுத்துத் தூங்கி விட்டார். மீதமிருந்த ஐஸ்கிரீமை அவர் வீட்டில் மேஜையின் மேல் வைத்திருந்தார்.இந்த சமயத்தில் அங்கு வந்த அவரது மகன் அத்வைத் மற்றும் தங்கை திரிஷ்யா (19) ஆகியோர் ஐஸ்கிரீமை பார்த்தவுடன் அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களும் மயக்கமடைந்தனர் இதையடுத்து 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அத்வைத் மற்றும் திரிஷ்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வர்ஷா தீவிர சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறினார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடந்த விவரங்களை வர்ஷா கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You'r reading விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை