தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த வருடம் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாகச் சென்று அந்தந்த மாநில அரசியல் கட்சிகள் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலை எப்போது நடத்தலாம், எத்தனை கட்டங்களாக நடத்தலாம், தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்புள்ள துணை தேர்தல் ஆணையாளர் சுதீப் ஜெயின் நாளை கொல்கத்தா செல்ல உள்ளார். அங்கு அவர் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார். இதன் பின்னர் ஒரு சில நாட்களில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் அவர் அறிக்கை தாக்கல் செய்வார்.
இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல் தேதிகள் அடுத்த வாரத்திலேயே அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மார்ச் 3ம் தேதி டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 5 மாநிலங்களுக்கும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதன்பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும். மேற்கு வங்க மாநிலத்தில் 6 முதல் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது. அசாமில் 2 அல்லது 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் எனக் கருதப்படுகிறது. மற்ற மாநிலங்களில் எத்தனை கட்டங்களில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படும்.