ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை ஜாக்கி எடுத்து சொந்தமாகவே கழட்டி ஸ்டெப்னி டயரை மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தான் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் டயரை கழற்றி மாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் காட்டும் பந்தாவை பல நேரங்களில் நாம் பார்த்திருக்கிறோம். கேரளாவில் ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அவரது பாதுகாப்பு அதிகாரி குடை பிடித்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விடுமுறை நாட்களில் கூட குடும்பத்துடன் வெளியே செல்லும் போதும் அரசு வாகனங்களைத் தான் இவர்கள் பயன்படுத்துவார்கள். ஒருவேளை செல்லும் வழியில் அந்த வாகனம் பழுதானால் அதை அங்கேயே விட்டுவிட்டு வேறு வாகனத்தை வரவழைத்து அதில் தான் செல்வார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி, தன்னுடைய காரின் டயர் பஞ்சர் ஆனதால் யாருடைய உதவியும் நாடாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவரே பஞ்சர் ஆன டயரை கழட்டி மாட்டி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மைசூர் மாவட்ட கலெக்டராக இருக்கும் ரோஹிணி சிந்தூரி கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய காரில் வெளியே சென்றுள்ளார். அங்கு உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது கார் டயர் பஞ்சர் ஆகியிருந்தது. உடனே எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரில் இருந்த ஜாக்கி மற்றும் உபகரணங்களை எடுத்து டயரை மாற்றத் தொடங்கினார். தற்செயலாக அங்கு வந்த ஒருவர் டயரை மாற்றிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பார்த்தவுடன் அவர் மாவட்ட கலெக்டர் ரோஹிணி சிந்தூரி என்பதை புரிந்து கொண்டார். ஆனாலும் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அந்த நபர், 'நீங்கள் கலெக்டர் ரோகிணி மேடம் தானே' என்று கேட்டுள்ளார். முதலில் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மீண்டும் அந்த நபர் கேட்டபோது சிரித்தபடியே ஆமாம் என்று அவர் கூறினார். ஏதாவது உதவி தேவையா என்று அந்த நபர் கேட்டபோது, 'இது என்னுடைய பிரச்சினை....நானே தீர்த்துக் கொள்கிறேன்' என்று சிரித்தபடியே கலெக்டர் ரோகிணி சிந்தூரி கூறினார். அதை தன்னுடைய செல்போனில் பதிவு செய்த அந்த நபர் உடனடியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.