தங்களுடைய 16 வயது மகளின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் 12 வயதான இளைய மகளை ₹ 10,000க்கு பெற்றோர் விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியை வாங்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கூலித் தொழில் செய்து வரும் ஒரு தம்பதிக்கு 16 மற்றும் 12 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த மகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்பட்டது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் நோய் குணமாகவில்லை.
இந்நிலையில் ஒரு மருத்துவமனையில் காண்பித்த போது அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், ₹ 25 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் அவர்களிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை. பணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாமல் அந்த சிறுமியின் பெற்றோர் பரிதவித்தனர். இந்த விவரம் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்ன சுப்பையா (46) என்பவருக்குத் தெரிய வந்தது.ஏற்கனவே அந்த வீட்டிலுள்ள 2 சிறுமிகள் மீதும் அவர் ஒரு கண் வைத்திருந்தார். சின்ன சுப்பையாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இதையடுத்து அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து கூலித் தொழிலாளியின் மகளை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு சின்ன சுப்பையா அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இது தான் தக்க சமயம் என்று கருதிய சின்ன சுப்பையா 12 வயது சிறுமியை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் அதற்குச் சம்மதித்த அந்த சிறுமியின் பெற்றோர், ₹ 25 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் கடைசியில் ₹ 10 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்று சின்ன சுப்பையா கூறினார். இதையடுத்து வேறு வழியின்றி ₹ 10,000க்கு தங்கள் மகளை அவரது பெற்றோர் சின்ன சுப்பையாவுக்கு விற்பனை செய்தனர். இதன் பின்னர் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அறிந்த அப்பகுதியினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சின்ன சுப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.