நந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...

by எஸ். எம். கணபதி, Mar 5, 2021, 20:43 PM IST

மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி, அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறக்கப்படுகிறார். மேற்கு வங்கத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி மக்களிடம் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே பலமிழந்து விட்டன. அவை தற்போது கூட்டணி அமைத்து மம்தாவை எதிர்த்து வருகின்றன. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக முக்கியப் பிரமுகர்கள் பலரும் அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, திரிணாமுல் கட்சிக்குள் உள்ள முக்கிய தலைவர்களை பாஜகவுக்கு இழுத்து வருகின்றனர். திரிணாமுல் கட்சியில் சுவெந்து அதிகாரி உள்பட 4 அமைச்சர்களும், பல எம்.பி, எம்.எல்.ஏ.க்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். சுவெந்து அதிகாரி, திரிணாமுல் கட்சியில் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தீவிர விசுவாசியாகவும், பல முக்கியப் பொறுப்புகளிலும் இருந்து வந்தவர். சமீபத்தில் மம்தாவிடம் சண்டை போட்டு விட்டு, பாஜகவுக்கு தாவினார். இடதுசாரிகள் ஆட்சியின் போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் தொகுதியின் சிங்கூரில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் நடந்தது. டாடா நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்பட்தை எதிர்த்து நடந்த அந்த போராட்டத்தை சுவெந்து அதிகாரியின் மேற்பார்வையில் தீவிரமாக நடத்தியவர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் ஆட்சிக்கு வருவதற்கு அந்த போராட்டம்தான் அடிப்படையாக அமைந்தது. அந்த நந்திகிராமம் தொகுதியில் சுவெந்து அதிகாரி தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்தார்.

தற்போது அவர் பாஜகவுக்கு தாவியதும், கடந்த ஜனவரியில் மம்தா ஒரு சவால் விட்டார். சுவெந்து அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் அவரை எதிர்த்து தானே போட்டியிடப் போவதாகவும், அது தனக்கு ராசியான தொகுதி என்றும் அறிவித்தார். தான் ஏற்கனவே போட்டியிட்ட பவானிப்பூரிலும் போட்டியிடுவதாக கூறியுள்ளார். மம்தாவின் இந்த அறிவிப்பு சுவெந்து அதிகாரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால், சொந்த தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். எனினும், அவர் தான் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என்று பேசி வைத்தார். இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று மேற்குவங்க வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. இதில், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், நந்திகிராமத்தில் மம்தா போட்டியிடுவதால், சுவெந்துவை அதே தொகுதியில் போட்டியிட வைக்கலாமா? அல்லது ரிஸ்க் எடுக்காமல் அவருக்கு வேறு வெற்றி வாய்ப்புள்ள பாஜக தொகுதியை ஒதுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சரும், அசன்சோல் எம்பியுமான பாபுல் சுப்ரியோ, மம்தாவை எதிர்த்து தான் போட்டியிடத் தயாராக உள்ளதாக கூறினார். ஆனால், அப்படி செய்தால் சுவெந்து அதிகாரியின் தோல்வியை ஒப்புக் கொள்வதாகி விடும் என்று யோசித்தனர். கடைசியில் சுவெந்து அதிகாரியே நந்திகிராம் தொகுதியில் போட்டிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது நந்திகிராம் தொகுதியில் மக்கள் சுவெந்து அதிகாரியை விரும்புகிறார்களா, அல்லது மம்தா பானர்ஜியின் தலைமையைத்தான் விரும்புகிறார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இந்த தொகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

You'r reading நந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி... Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை