டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இதற்கிடையே, கடந்த ஜன.26 குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. பலரும் அத்துமீறி டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியை ஏற்றினர்.
அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு டெல்லி போலீசார் கடுமையாக இருந்ததால் விவசாயிகளின் போராட்டம் தளர்வடைந்தது. ஆனாலும், டெல்லியின் திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையே, வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மத்திய அரசு அந்த சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மே, ஜூன் மாதங்களில் அதிகமான வெப்பம் நிலவும் என்பதால், அதை எதிர்கொள்ள வசதியாக பல்வேறு முன்னேற்பாடுகளை விவசாயிகள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். இது குறித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விவசாயச் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.பாந்தர் கூறுகையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். வெயில் காலத்தை சமாளிப்பதற்காக டிராக்டர்களில் மேற்கூரை அமைத்து, சிறிய வீடு போல் வடிவமைத்து அவற்றை டெல்லிக்கு அனுப்பி வருகிறோம். டிராக்டருக்குள் மின்விசிறி, வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் செய்திருக்கிறோம். மத்திய அரசு இறங்கி வரும் வரை போராட்டத்தை நிச்சயமாக தொடர்வோம் என்று தெரிவித்தார்.