உலக கோடீசுவரர்கள் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 35-வது ஆண்டிற்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
நீண்ட பட்டியலில் 2,755 பெரும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 660 அதிகம். இப்பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 724 பேரும், சீனாவை சேர்ந்த 698 பேரும், இந்தியாவை சேர்ந்த 140 பேரும் இடம்பெற்றுள்ளனர். அதிகமான பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை மீண்டும் கைப்பற்றி உள்ளார். ஓராண்டுக்கு முன்பு, இந்த அந்தஸ்தை சீனாவை சேர்ந்த ஜாக் மா பெற்றிருந்தார். அவரை வீழ்த்தி முகேஷ் அம்பானி இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 450 கோடி டாலர் (ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 400 கோடி) ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 10-வது இடத்தில் உள்ளார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்திலும், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 3-வது இடத்திலும் உள்ளனர்.
உலக பெரும் பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 17 ஆயிரத்து 700 கோடி டாலர் (ரூ.12 லட்சத்து 74 ஆயிரத்து 400 கோடி) ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 15 ஆயிரத்து 100 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் இருக்கிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்டு அர்னால்ட், அமெரிக்காவின் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்த நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மட்டும் அதிகரித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.