Monday, Jun 14, 2021

அன்று வாட்ச்மேன் இன்று ஐஐஎம் பேராசிரியர் – யார் இந்த ரஞ்சித்?

by Madhavan Apr 12, 2021, 18:28 PM IST

நம்பிக்கையை சுமந்துகொண்டு, உழைப்பை கூட்டி கனவுகளை துரத்திக்கொண்டிருந்தால் வெற்றி வசப்படும் என்பதை நிரூபித்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 28வயது இளைஞரான ரஞ்சித். வறுமையை பின்புலமாக கொண்டவர் ரஞ்சித்.

அப்பா தையல்காரர், அம்மா தினக்கூலி காசர்கோட்டில் உள்ள மலைகிராமத்தில் இருந்து ராஞ்சியில் உள்ள ஐஐஎம்-மில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியாக பணியில் சேரவுள்ளார் ரஞ்சித். இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

ஓட்டு வீடு, வாசலில் இருக்கும் கேஸ் சிலிண்டர், தூரமாக நிற்கும் டிடிஹெச் குடை, ஒரு ஜோடி செருப்பு என தனது வீட்டை முகநூலில் அறிமுகப்படுத்துகிறார் ரஞ்சித். அவருடைய நீண்ட பயணம் இங்கிருந்துதான் தொடங்கியுள்ளது.

இதுதான் நான் பிறந்த வீடு. இங்கிருந்து தான் வளர்ந்தேன். நான் சந்தோஷமா சொல்வேன் இந்த வீடுதான் ஒரு ஐஐஎம் உதவி பேராசிரியரை உருவாக்கியது என்று. இந்த சின்ன வீட்டுல இருந்து ஐஐஎம் ராஞ்சிக்கான எனது பயணத்தை உங்களுக்கு சொல்கிறேன் என்று தொடங்குகிறார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளவர், ``எனது பயணத்தால் குறைந்தது ஒரு நபராவது ஈர்க்கப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு நல்ல மதிப்பெண்ணுடன் ப்ளஸ் டூ பாஸ் செய்தேன். ஆனால் அப்போது சூழ்நிலைகள் எனக்கு சாதகமாக இல்லை. என்னுடைய படிப்பை நிறுத்திவிடலாம் என எண்ணினேன். எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. பனத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நைட் வாட்ச்மேன் வேலை கிடைத்தது. அதை வைத்து எனது படிப்பை தொடர்ந்தேன். காலையில் மாணவன் இரவில் வாட்ச்மேன்.

காசர்கோடு தாண்டியும் இந்த உலகம் இருக்கிறது என்பதை செண்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா எனக்கு கற்றுத்தந்தது. அப்படித்தான் ஐஐடி மெட்ராஸ் என்ற பெரிய உலகத்தை அடைந்தேன். அது ஒரு விசித்திரமான இடம். மலையாளத்தில் மட்டுமே பேசி வளர்ந்தவன் இங்கு மற்றவர்களிடம் பேசவே அச்சப்பட்டேன். என்னுடைய ஆய்வு படிப்பை கைவிட்டு விடலாம் என்று கூட நினைத்தேன். என்னுடைய வழிக்காட்டி டாக்டர். சுரேஷ் நான் எடுத்த முடிவு தவறு என்பதை எனக்கு உணர்த்தினார். நான் விலகுவதற்கு முன்பு போராடச் சொன்னார். அப்போதிலிருந்து நான் வெல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.பனத்தூர் மலைப்பகுதியில் இருந்து தொடங்கிய என்னுடைய பயணம் சுலபமானதல்ல. இந்தப்பயணத்தில் என்னுடன் சேர்ந்து எனது பெற்றோர்களும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற ஆயிரம் குடிசைகள் உள்ளது. இந்த குடிசைகளில் இருந்து பல கனவுகள் நிறைவேறுதற்கு முன்பாகவே மடிந்துள்ளது. இனி, இந்தக்குடிசைகளில் இருந்து பல வெற்றிகரமான கதைகள் வரவேண்டும். உங்களை சுற்றி இடிந்து விழுந்த சுவர்கள் இருக்கலாம். அதற்காக நீங்கள் உயர்ந்த கனவை காண்பதை நிறுத்தாதீர்கள். உங்கள் கனவு நிச்சயம் ஒருநாள் நனவாகும் எனப் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ்மேன் வேலைக்குச் சென்று தனது கனவுகளை அடைந்திருக்கிறார் ரஞ்சித்.

You'r reading அன்று வாட்ச்மேன் இன்று ஐஐஎம் பேராசிரியர் – யார் இந்த ரஞ்சித்? Originally posted on The Subeditor Tamil

More India News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை