மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருப்பவர் சீதாராம் யெச்சூரி. இவரின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி. 34 வயதான ஆஷிஸ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையில், ஆஷிஸ் யெச்சூரிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ``எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். பலரையும் இந்த நிகழ்வு அதிர்ச்சியடைச் செய்துள்ளது. சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மகன் ஆஷிஷ் யெச்சூரி இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.