கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 8-வது கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. 5 மாநிலத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே நேற்றைய தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் விளக்கம் அளித்தன. அப்போது அவர்களின் விளக்கங்களை பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என குற்றம் சாட்டினர். ஞாயிறு அமலில் உள்ள முழு ஊரடங்கை போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 மற்றும் அதற்கு முந்தைய நாள் மே 1ம் தேதியும் முழு ஊரடங்கை அமல்படுத்த ஆலோசிக்க வேண்டும் என பரிந்துரை வழங்கினர். அதேசமயம் மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு யார் யார் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கூட்டம் கூடுவதை தடுக்கும் நோக்கத்தை தவிர இதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை அவர்கள் தெளிவு படுத்தினர்.
இந்த நிலையில், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், வெற்றி சான்றிதழைப் பெற செல்லும் வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.