சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர்.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், மருத்துவர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்க பரிந்துரைத்து வருகின்றனர். இதனால் மருத்தவர்களின் பரிந்துரை சீட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைகின்றனர். இந்நிலையில் ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது.
ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர், நோயாளியின் ஆதார் அட்டை, மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு, ஆர்டிபிசிஆர், பரிசோதனை சான்று, சிடி.ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று ஒரு குப்பிக்கு 1,545 ரூபாயை கொடுத்து மருந்துகளை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று திறக்கப்பட்ட இந்த சிறப்பு மையத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக ஏராளமானோர் கூடினர். இந்த நிலையில், நேற்று மருந்து வழங்க முடியாதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, டோக்கன் பெற்றவர்களுக்கு இன்று காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது.