தமிழகம் சொந்த கொண்டாட முடியாது மத்திய அரசு கறார் - பற்றி எரியும் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் விவகாரம்!

by Madhavan, Apr 27, 2021, 15:13 PM IST

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுப்ரீம்கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்” என்று தெரிவித்தது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, “ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் இயக்க அனுமதிக்கலாம், வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ் வரராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த விசாரணை நடத்தியது.

அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் தயாரித்து வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் பிரமாண பத்திரமும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு 2 கோரிக்கைகளை முக்கியமாக தெரிவித்து உள்ளது. ஒன்று ஸ்டெர்லைட் ஆலையில் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது. 2-வது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தர வேண்டும் என்று கூறி உள்ளது.

இதற்கு வேதாந்தா நிறுவனம் சார்பில், “கண்காணிப்பு குழுவில் ஆலை பகுதி மக்கள் இடம் பெற கூடாது. ஏற்கனவே அந்த பகுதி மக்களால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துள்ளோம்” என்றார். அதை கேட்ட நீதிபதிகள், “கண்காணிப்பு குழுவில் அரசு அதிகாரிகள், நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடம் பெற செய்யலாமே. அந்த குழுவினர் உள்ளூர் குழுவில் உள்ளூர் பகுதி மக்களும் இடம் பெற வேண்டும்” என்று வற்புறுத்தினர். வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட்ட மத்திய அரசு வக்கீல் கண்காணிப்பு குழுவில் உள்ளூர் பகுதி மக்கள்இடம் பெற தேவையில்லை” என்றார்.

அடுத்து ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தங்களுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசும், தமிழக அரசும் சொந்தம் கொண்டாடியது.

தமிழக அரசு வக்கீல் வாதிடும்போது, “உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மாநிலத்தின் தேவைக்கு போக மீதியை மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம்” என்றனர்.

ஆனால் மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. “ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனுக்கு தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது.

உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும். தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் தட்டுப்பாட்டை அறிந்து மத்திய அரசே பிரித்து வழங்கும்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஆலையின் நிர்வாகம், இயக்கம் ஆகியவை அரசின் கண்காணிப்பில் இருக்கலாம். ஆனால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கு வதை தடுக்க கூடாது. ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடமே வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது” என்றனர்.

You'r reading தமிழகம் சொந்த கொண்டாட முடியாது மத்திய அரசு கறார் - பற்றி எரியும் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் விவகாரம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை