கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றினால் அவர் மூலமாக 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் தினமும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில், பல்வேறு ஆய்வுகளை சுட்டிக்காட்டி மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கொரோனா நோயாளிகள் தங்களை கட்டுப்படுத்தாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றினால் 30 நாட்களில் ஒரு நோயாளி மூலமாக 406 பேருக்கு தொற்று அவர் மூலம் பரவுகிறது.
முகக்கவசம் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனில் தொற்று உள்ளவர்கள் நிச்சயம் தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்றை பரப்புவார்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்தால் பரவும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இருவருக்கு இடையே 6 அடி இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.